நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2013 10:03
புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நாளை (24ம் தேதி) கோலாகலமாக நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். நாரதர் தவம் இருந்து அம்பாளை வழிபட்ட பெருமைக்குரிய இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 31ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 8ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் தொட்டு இழுக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நாளை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பூ தட்டுகளை ஏந்தியவாறு பக்தர்கள் ஊர்வலமாக வருகின்றனர். புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர்.