பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கூடலூர் கிராமத்தில், மழை வேண்டி, பக்தர்கள் அலகு குத்தி, முருகன், அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுராந்தகத்தை அடுத்துள்ள கூடலூர் ஊராட்சியில், கெங்கையம்மன், மாரியம்மன் மற்றும் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில், கடந்த 45 ஆண்டுகளாக, பங்குனி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேர்த்திக் கடன் இங்குள்ள மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால், கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வறண்டு, விவசாயம் முடங்கியது. எனவே, இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவில், "மழை பெய்ய வேண்டும், விவசாயம் பெருக வேண்டும், வீடும் நாடும் செழிக்க வேண்டும், என, சிறுவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். பின், கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை செய்தனர். கடந்த மூன்று நாட்களாக நடந்த வழிபாட்டில் முதல் நாளான 22ம் தேதி காலை 9:00 மணிக்கு கெங்கையம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அலகு குத்தி... இரண்டாவது நாளான 23ம் தேதி காலையில் முருகனுடைய, வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் உடலில் அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கியவாறு மாரியம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள கோவில் குளத்தில் புனித நீராடி, முருகனை வழிபட்டனர்.