பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை பாலசுப்ரமணிய முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, இன்று நடக்கிறது. "மகிஷி எனும் அரக்கியை அழிக்க, ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரால் மட்டுமே முடியும் என்ற சூழ்நிலையில், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் தர்ம சாஸ்தா அவதரித்தார். அவரைத்தான், "ஐயப்பன் என அழைக்கிறோம். பின்னர், அரக்கி மகிஷியை, ஐயப்பன் வதம் செய்து அழித்தார் என புராணங்கள் கூறுகிறது. தர்ம சாஸ்தா அவதார தினத்தையும், சிவன், பார்வதி மற்றும் முருகன் உள்ளிட்ட ஸ்வாமிகளின் தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த நாளாகவும், "பங்குனி உத்திர நட்சத்திரத்தை கொண்டாடி வருகிறோம். இந்நாளில், கோவிலுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வதால், பல நன்மைகள் கிடைக்கும் என, ஆன்மிக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கோவில் ஸ்தல வரலாறு: சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் காட்டுக்கோட்டை, சதாசிவபுரம் பஞ்சாயத்து எல்லையில், கல்வராயன் மலை தெற்கு குன்றில், வடசென்னிமலை உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியர் என்ற பெயரில், முருகன் கோவில் உள்ளது. நக்கீரர் குறிப்பிடும் குன்று தோறாடலில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையும் ஒன்று. அதிலிருந்து வேறுப்படுத்தி அறிய, மக்களால், "வடசென்னிமலை என்றழைக்கப்படுகிறது. இக்குன்றினை சுற்றி, பசுமையான வயல் வெளிகளும், தென்னை தோப்புகளும், மரம் செடி அமைந்த இயற்கை நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. மேலும், வடக்கு திசையில், காட்டுக்கோட்டை, புதூர் கிராமமும், தெற்கில் சதாசிவபுரமும், கிழக்கில் சார்வாய், தலைவாசல் பகுதியும், மேற்கில் வளையமாதேவி, ஆத்தூர் பகுதி என அமைந்துள்ளது. குன்றாக காணப்படும் மலையில், இக்கோவில் உள்ளது. கடந்த, 90 ஆண்டுகளுக்கு முன், மேற்குறிப்பிட்ட கிராமப்புறங்களை சேர்ந்த சிறுவர்கள், இக்குன்றின் மீது, ஆடு, மாடுகளை மேய்த்து வந்தனர். அப்போது, அழகு மிகுந்த சிறுவன் ஒருவன், அடிவாரத்திலிருந்து, மேலே ஓடுவதை கண்டனர். வியப்படைந்த சிறுவர்கள், அச்சிறுவனை பின்தொடர்ந்து சென்றனர். மலை உச்சியினை அடைந்த சிறுவன், குறிப்பிட்டதொரு இடத்தில், "பேரொளி பிழம்புடன் மறைந்துள்ளான். அதை, கிராம பெரியோர்களிடம், அச்சிறுவர்கள் கூறியுள்ளனர். மறுநாள் அந்த சிறுவர்களோடு மலை உச்சியில் சென்று பார்த்தபோது, வடிவமற்ற மூன்று சிலைகள் தோன்றியிருந்தன. மேலும், அவ்விடத்தில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியன வைத்து வழிப்பட்ட அறிகுறியும் இருந்தது. அதை பார்த்த பெரியவர்கள் வியந்தனர். இங்கு சிறுவனாக வந்தது, "முருகன் தான் இவ்விடத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார் என மக்கள் கருதினர். அதையடுத்து, முதற்கட்டமாக, சிறிய முருகன் கோவில் கட்டப்பட்டது. சிறப்பம்சம் சின்னக்கல்வராயன் மலைத்தொடரின் தெற்கில் உள்ள வடசென்னிமலையின் மொத்தப்பரப்பளவு, 175 ஏக்கர் என கணக்கிடப்பட்டுள்ளது. மலையின் உச்சியிலுள்ள பாலசுப்ரமணிய முருகன் கோவில், மேற்கு திசை நோக்கி உள்ளது. முருகனை தரிசிக்க படிகள் கொண்ட பாதையிலும், மற்றொரு பாதையாக தார்சாலையாகவும் உள்ளது. வழிப்பாதையின் நடுவில், மலையினை தூக்கிய இடும்பன் கோவிலும், காவடி தூக்கியபடி கடம்பன் கோவில் இருக்கிறது. இதேபோன்று, பாலகனாக உள்ள முருகன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒளவையார் பாட்டிக்கு தனி கோவிலும் உள்ளது. அங்கு, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்றவை வேண்டுதல் செய்யப்பட்டுள்ளது. கோவிலினுள் செல்லும்போது, ராஜ நிலை கொண்ட அழகிய கோபுரமும், சிறப்பு மிகுந்த சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்களான படிகளில், மொத்தம் உள்ள, 60 தமிழ் ஆண்டுகள், ஒவ்வொரு படிகளிலும் எழுதப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம், 428 திருப்படிகள் உள்ளன.