பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
தர்மபுரி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, கம்பைநல்லூர் சிவசுப்பிரமணியர் ஸ்வாமி கோவில் தேர் திருவிழா, நாளை (27ம் தேதி) நடக்கிறது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் செங்குந்தர் தெருவில், சிவசுப்பிரமணியர் ஸ்வாமி கோவிலில், கடந்த, 21ம் தேதி புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி உத்திர விழா, 22ம் தேதி காலை, 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. இன்று காலை பால்குட ஊர்வலமும், மாலை, 6 மணிக்கு காவடி திருவீதி உலாவும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை (27ம் தேதி) காலை, 9 மணிக்கு கோவிலில் வினாயகர் ரத ஆரோகணமும், திருத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 28ம் தேதி சிவசுப்பிரமணியர் ரத ஆரோக்கணமும், இரவு, 7 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் திருத்தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, 30ம் தேதி மஞ்சள் நீராட்டம், கொடி இறக்கம் உற்சவம், பிச்சாண்டி திருவிழா நடக்கிறது. 31ம் தேதி சயனோற்சவம், ஏப்ரல், 1ம் தேதி வசந்த உற்சவம் நிகழ்ச்சிகள் கோவில் நந்தவனத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செங்குந்தர் மரபினர் செய்துள்ளனர்.