பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து மைசூருக்கு அதிக அளவில் மாடுகளை விற்பனைக்காக கொண்டு செல்லும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்தது. மலையாள வணிகர்கள் வனப்பகுதி வழியே மாடுகளை கால்நடையாக ஓட்டிச் செல்லும் போது, தங்கள் துணைக்கு வண்ணார்காடு என்ற இடத்தில் இருந்து மாரியம்மனையும் அழைத்து வருவார்கள். வணிகர்களின் துணைக்கு வந்த மாரியம்மன், பண்ணாரி வனத்தின் செழிப்பில் மயங்கி ஓரிடத்தில் நிலை பெற்று விட்டாள்.பிற்காலத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் அருந்தும் அதிசயத்தை, வனத்துக்குள் பட்டி அமைத்து மாடுகளை மேய்த்து வந்தவர்கள் கண்டனர். அத்துடன் பட்டியில் இருந்த ஒரு காராம்பசுவின் மடியில் மட்டும் பால் தினமும் வற்றுவதை கண்டனர். பசுவை கண்காணித்தபோது, அது தினமும் ஒரு வேங்கை மரத்தின் அருகில் சென்று நிற்பதும், அதன் மடியில் இருந்து பால் தானாக சொரிவதும் கண்டு வியந்தனர். கணங்கு புற்கள் சூழ்ந்த அந்த இடத்தில் ஆழ்ந்து பார்க்கையில், உள்ளே புற்றும், சுயம்புவாக மாரியம்மனும் இருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் கணங்கு புற்களால் குடில் அமைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த சக்தி தலங்களுள் ஒன்றாக இத்தலம் அமைந்து விட்டது. இதுவே பண்ணாரி மாரியம்மன் கோவில். கொங்கு நாட்டின் வட மேற்கு எல்லையில், சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் அமைந்திருக்கிறது பண்ணாரி. கொங்கு நாட்டின் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக பண்ணாரியில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். கோவிலின் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று புறமுமே வனம் சூழ்ந்திருக்கிறது. திம்பம் மலையடிவாரத்தில், அருமையான காட்டாறு அருகில் ஓட, இயற்கை சூழலில் இக்கோவில் அமைந்திருக்கிறது. பங்குனி குண்டம் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி உத்திரத்தை அடுத்த மறு செவ்வாய்க் கிழமை பண்ணாரியில் குண்டம் (பூக்குழி) இறங்கும் விழா நடக்கிறது. அதற்கு, 15 நாட்களுக்கு முன்பாக கோவிலில் பூச்சாட்டு விழா நடக்கிறது. நடப்பாண்டு மார்ச், 11ம் தேதி பூச்சாட்டுதல் நடந்தது. குண்டம் இறங்குபவர்கள் பூச்சாட்டு நாளில் காப்பு கட்டி விரதத்தை ஆரம்பித்தனர். 12ம் தேதி நித்தியப்படி பூஜை நடந்தது. அன்று தன் பக்தர்களை காண, அம்மனின் வீதியுலா துவங்கியது. அன்று இரவு, 12 மணிக்கு சிக்கரசம்பாளையத்துக்கு அம்மன் எழுந்தருளினார். 13ம் தேதி அம்பிகை புதூரில் எழுந்தருளல், 14ல் வெள்ளியம்பாளையம் எழுந்தருளல், மாலை கொத்தமங்கலம், இரவு தொட்டம்பாளையம் ஆகிய இடங்களுக்கு அம்மன் சென்றார். மார்ச் 15ம் தேதி தொட்டம்பாளையத்தில் இருந்து வெள்ளியம்பாளையம் புதூருக்கு, பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து சென்றார். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பரிசலில், குடைபிடித்து அம்மனை பாதுகாப்பாக எடுத்து வந்தனர். அன்று அக்கரைத்தப்பள்ளியில் இரவு தங்கினார். மார்ச் 16ம் தேதி உத்தண்டியூர், அய்யன்சாலை, ராமவரம், தாண்டம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், வழியாக சத்தியமங்கலம் வந்தார். மார்ச் 17ம் தேதி சத்தியில் உலா வந்து, இரவில் வேணுகோபாலசுவாமி கோவிலில் தங்குதல் நடக்கிறது. மார்ச், 18ம் தேதி ரங்கசமுத்திரம், கோணமூலை, காந்திநகர், திம்மையன் புதூர், கோட்டுவீராம்பாளையம் ஆகிய இடங்களில் காட்சி தந்தார். மார்ச் 19ம் தேதி பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன்நகர் வழியாக இரவு பண்ணாரி வந்தடைந்தார். அன்று இரவு கம்பம் சாட்டப்பட்டது. மார்ச், 20ம் தேதி முதல், 24ம் தேதி வரை நித்தியப்படி பூஜை, இரவில் மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டம் நடந்தது. 25ம் தேதி திருக்குண்டம் திருவிழாவுக்காக இரவு, 1 மணிக்கு திருக்குளம் சென்று, அம்மன் அழைத்தல் நடந்தது. அம்மனிடம் வரம் பெற்று குண்டம் திருவிழாவுக்கு இசைவு பெறப்பட்டது. இன்று (26ம் தேதி) அதிகாலை, 4 மணிக்கு திருக்குண்டம் திருவிழா நடக்கிறது. குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், தலைமை பூசாரி சேகர் முதலில் குண்டம் இறங்கி, விழாவை துவக்கி வைப்பார். தொடர்ந்து பக்தர்கள் இறங்குவர். பெண்களே அதிகம் பங்கேற்பர். மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து, கையில் வேப்பிலையுடன், "பண்ணாரி தாயே மாரியம்மா.. என்ற கோஷத்துடன் பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ மிதிப்பர். மத்திய, மாநில அரசுகளின் வி.ஐ.பி.,க்கள் பலரும் குண்டம் இறங்குவது வழக்கம். குண்டம் இறங்குவதற்காக, ஈரோடு, கோவை மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டல்பேட், கொள்ளேகால், மைசூரு மற்றும் பெங்களூருவில் இருந்தும் பக்தர்கள் பண்ணாரியில் குவிந்துள்ளனர். குண்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கோவில் வாசலில் குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசை ஆரம்பமாகிவிட்டது. ஆண்டுதோறும் குறைந்தது ஒரு லட்சம் பேராவது பூ மிதிப்பர். அதிகாலையில் ஆரம்பமாகும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இரவு வரை நீடிக்கும். கடைசியாக நேர்த்திக் கடனாக பக்தர்கள் செலுத்தும் கால்நடைகளும் குண்டம் இறங்கும். இன்று முழுவதும் வனமெங்கும் "மாரியம்மா.. கோஷம் எதிரொலிக்கும். குண்டத்தை அடுத்த ஏழாம் நாள் மறுபூஜை நடக்கிறது. மிரவணை எடுத்தல் என்ற நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் திரிசூலத்துடன் கோயிலை சுற்றி வருவர். பண்ணாரி கோவில் அமைவிடம் ஈரோடு மாவட்டத்தின் எல்லையில், கோவை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது பண்ணாரி. கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, கோபி, திருப்பூரில் இருந்து பஸ்கள் உண்டு. சத்தியில் இருந்து, 10, 10ஏ, 5 ஆகிய டவுன் பஸ்கள் உள்ளன. குண்டத்தின் போது திருவிழா சிறப்பு பஸ்கள் ஏராளமாக இயக்கப்படும். கோவில் தினசரி காலை, 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு, 9 மணிக்கு திருக்காப்பிடப்படும். கோவிலில் தங்கக்கவச கட்டணம் ரூ.750, அர்ச்சனைக் கட்டணம் ரூ. 100, கால பூஜை அபிஷேக கட்டணம் ரூ. 500, அன்னதானம், ரூ.500, அபிஷேகம், ரூ.500, இலவச பிரசாதம், ரூ.1,500. அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. பூஜைகளுக்கு மின்னஞ்சல் மூலமும் பதிவு செய்யலாம். கோவில் ஃபோன் எண்: 04295 243 289.