பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
சேலம்: சேலத்தில், பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், திரளாக காவடி எடுத்து சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பங்குனி உத்திரத்திருநாளில், முருகன் கோவில்களில், இறைவனின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். முருகப்பெருமானின் அருளைப்பெறுவதற்கு, பங்குனி உத்திரத்தில், விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினால், நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகமாகும். சேலம் மாவட்டத்தில், நேற்று பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், காலை, 6 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டா ரபகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, கோவிலுக்கு மயில்காவடி, பால்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர். காலை, 11 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7 மணிக்கு, ஸ்ரீ சண்முகசாமி மாடவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஜாகீர் அம்மாப்பாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில், காலை, 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. சேலம் ஊத்துமலை பாலசுப்ரமணி கோவில், அம்மாப்பேட்டை முருகன் கோவில் ஃபேர்லாண்ட்ஸ் முருகன் கோவில், குமாரசாமிப்பட்டி முருகன் கோவில், டி.பெருமாப்பாளையம் கொம்பேரிக்காடு சிவசக்தி முருகன் கோவில், சென்ன கிருஷ்ணாபுரம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனம், குங்குமன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அனைத்து கோவில்களிலும், புளிசாதம், தயிர், பொங்கல் உள்ளிட்டவை, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.