பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
11:04
நித்திரவிளை: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா இன்று(3ம் தேதி) துவங்கி, வரும் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. குமரி மாவட்டம், கேரள எல்லையை ஒட்டி காணப்படும் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், தேவி கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது. இங்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் நொடியின்றி, நல்லறிவு பெற்று, நீண்டகாலம் வாழவும், அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. 40 அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என, நான்கு பேர் கையில் ஒவ்வொரு குழந்தையுமாக, ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒருமுறை சுற்றி வரும் போது, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆண்டைய பங்குனி பரணி தூக்கத் திருவிழா இன்று(3ம் தேதி) துவங்குகிறது. விழாவில் காலை பள்ளியுணர்த்தல், கணபதிஹோமம், ஏழு மணிக்கு பிரதான கோயிலில் இருந்து, மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வருதல், மதியம் அன்னதானம், மாலை தாலப்பொலி, பஞ்சவாத்தியம், செண்டைமேளம், சிங்காரிமேளம், நாதஸ்வரம், நையாண்டிமேளம், யானை அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. கண்ணனாகம், ஸ்ரீதேவிபள்ளி, கீழ்வீட்டு நாகராஜா காவு, இளம்பாலமுக்கு, மகாதேவர் சன்னதி ஆகிய இடங்களில் பூஜைகள் பெற்று, அம்மன் வெங்கஞ்சி கோயிலுக்கு எழுந்தருளுவார். மாலை திருக்கொடி ஏற்றுதல் நடக்கிறது. துவக்க விழாவிற்கு கோயில் கமிட்டி தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார்.
திருவனந்தபுரம் சாந்திகிரி ஆசிரம சுவாமி குருரத்னம் ஞானதபசி குத்துவிளக்கு ஏற்றுகிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சசிதரூர், அமைச்சர் பச்சைமால், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ., கொல்லங்கோடு பஞ்., தலைவர் அருளானந்தன் முன்னிலை வகிக்கின்றனர். கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை கேரள அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சிவகுமார் துவங்கி வைக்கிறார். விழா நாட்களில் தினமும் பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதிஹோமம், தீபாராதனை, அன்னதானம், கலைநிகழ்ச்சி நடக்கிறது. நாளை(4ம் தேதி) மாலை ஓட்டன்துள்ளல், சங்கீதார்ச்சனை நடக்கிறது. நாளை மறுநாள்(5ம் தேதி) மூன்றாம் திருவிழாவில் காலை தூக்க நேர்ச்சை பதிவு செய்யப்படுகிறது. நான்காம் நாள் விழாவில் காலை தூக்கம் எழுதி நிறுத்தல், தூக்க நேர்ச்சை குலுக்கல் நடக்கிறது. இரவு தூக்கக்காரர்கள் நீராடி விட்டு பிரதான கோயிலுக்குச் சென்று, வினாயகருக்கு தேங்காய் உடைத்து, வெங்கஞ்சி கோயிலில் நமஸ்காரம் செய்தல் நடக்கிறது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் தூக்கக்காரர்கள் காலை ஆறு மணி, மாலை ஐந்தரை மணி ஆகிய இரு வேளைகளில் தினமும் நமஸ்காரம் செய்கிறார்கள். ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் நாள் விழாக்களில் காலை சமய சொற்பொழிவு, மாலை பஜனை, மகளிர் மற்றும் பண்பாட்டு மாநாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவில் மாலை ஆறு மணிக்கு வண்டியோட்டம் நடக்கிறது. பிற்பகல் மூன்று மணிக்கு, தூக்கக்காரர்கள் பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கலச பூஜைக்குப் பின், பூரண கும்பத்துடன் கோயிலை வந்தடைகிறார்கள். பத்தாம் நாள் விழாவில் காலை ஆறு மணி முதல் பக்தி பரவசமூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் மோகன்குமார், துணைத்தலைவர் அப்புக்குட்டன், இணைச்செயலாளர் சுகுமாரன், பொருளாளர் சனல்குமாரன், பிரதிநிதிசபை சேர்மன் சதாசிவன், துணை சேர்மன் குட்டன்பிள்ளை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்துவருகின்றனர்