பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்.,23ல் நடக்கிறது. இதை முன்னிட்டு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வரும் 6000 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக அனுமதி அளிக்கப்படவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,13 முதல் ஏப்.,25 வரை நடக்கிறது. ஏப்.,14ல் கொடியேற்றம், ஏப்.,21ல் பட்டாபிஷேகம், ஏப்.,22ல் திக்விஜயம், 23ல் திருக்கல்யாணம், 24ல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. "திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் சார்பில் இலவச பாஸ் வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக, மேற்கு கோபுரம் வழியாக 1500 பேருக்கும் (நபருக்கு ரூ.500 கட்டணம்), வடக்கு கோபுரம் வழியாக 4000 பேருக்கும் (நபருக்கு ரூ.200) அனுமதி வழங்கப்படும். தெற்கு கோபுரம் வழியாக முதலில் வரும் 6000 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் இலவச அனுமதி வழங்கப்படும். தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் சித்திரை பொருட்காட்சி நடத்தப்படும், என்று கலெக்டர் தெரிவித்தார். டி.ஆர்.ஓ., ரவீந்திரன், கோயில் இணை ஆணையர் ஜெயராமன், போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, ஆர்.டி.ஓ., ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.