மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவிலில், நேற்று குண்டம் விழா சிறப்பாக நடந்தது. விழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 26ல் அக்னி கம்பம் நடப்பட்டது; 29ல் திருவிளக்கு பூஜை வழிபாடும், 31ல் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் அக்னி குண்டம் திறந்து, பூ போடப்பட்டது. நேற்று காலை 7.00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். 7.30 மணிக்கு தலைமை பூசாரி வெள்ளிங்கிரி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து, பூ பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பள்ளி, மாணவ, மாணவியர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அம்மன் திருவீதி உலாவும், 5ல் மஞ்சள் நீராட்டும், அபிஷேக பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.