பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
11:04
அவிநாசி: அவிநாசி தேர்த்திருவிழா தெப்போற்சவத்துக்காக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வரும் 20ம் தேதியும், 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 22ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேருக்கு எழுந்தருளல் ஆகியன நடக்கின்றன. வரும் 23ம் தேதி காலை 9.00 மணிக்கு பெரிய தேர் மற்றும் 24ம் தேதி அம்மன் தேர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி மாலை 6.00 மணிக்கு தெப்போற்சவம் நடக்கிறது. அதற்காக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். செயல் அலுவலர் வெற்றிச்செல்வனிடம் கேட்ட போது, ""கோவில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இருப்பினும், வேறு ஏதாவது ஒருவழியில் தண்ணீரை பெற்று குளத்தை நிரப்பி, தெப்போற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றார். தெப்போற்சவ மண்டப கட்டளை நடத்தும், தேவர் சமூக நலச்சங்க நிர்வாகி கூறுகையில், "தெப்பத்தேர் நாளன்று சந்திரகிரஹணம் வருவதால், மாலை 4.00 மணிக்கு மண்டப கட்டளை பூஜை துவக்கப்படும். 6.00 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும். குளத்தில், தண்ணீர் விடுவதற்கான ஆலோசனையை, கோவில் நிர்வாகத்திடம் நடத்தியுள்ளோம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம், என்றார்.