பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
11:04
அவிநாசி: அவிநாசி கோவில் தேர்த்திருவிழாவுக்கு, துறை வாரியாக ஏற்பாடுகள் செய்வது குறித்து, ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவி லில், சித்திரை தேர்த்திருவிழா வரும் 16ல் துவங்குகிறது; 24, 25 ஆகிய இரு நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளில், துறைவாரியான பங்களிப்பு மற்றும் ஆலோசனை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், தாசில்தார் மோகன் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
* திருவிழா துவங்கும் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவிலுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். தேரோட்டத்தின்போது, ரத வீதிகளில் குறுக்காக செல்லும் மின்கம்பிகளை தற்காலிகமாக தளர்த்தி, இணைப்பை துண்டித்து, தேரோட்டம் முடிந்தவுடன் மீண்டும் இணைப்பு வழங்க வேண்டும்.
* கோவில் வளாகத்தில், தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் தண்ணீருடன் நிறுத்தி வைக்க வேண்டும். 22 முதல் 25 வரை நான்கு நாட்களுக்கு போதுமான பணியாளர்களுடன், பணியில் இருக்க வேண்டும். 25ம் தேதி நடக்கும் தெப்போற்சவத்தின்போது, நீச்சல் தெரிந்த "டைவர்ஸ் நான்கு பேர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனை சார்பில், மருத்துவக்குழு நியமித்து முதலுதவி மையம் அமைக்க வேண்டும். தேவைப்படும் மருந்து, மாத்திரைகளுடன் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேரோட்டத்தின்போது, டாக்டர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ், சுற்றி வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கோவில் மற்றும் நான்கு ரத வீதிகள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண் டும்; ரத வீதிகளை செப்பனிடுவதோடு, வர்த்தக நிறுவனங்களுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, குப்பை தொட்டி, பிளீச்சிங் பவுடர், தற்காலிக கழிப்பறை, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி ஆகிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
* ரத வீதிகளில், தேரோட்டத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், விளம்பர பலகை களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும். தேரோட்டத்தின்போது, மாற்றுப்பாதையில், வாகனங்களை திருப்பி விட, போலீ சார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன், கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், ஆர்.ஐ., ராம் லட்சுமணன், வி.ஏ.ஓ., அய்யப்பன், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (நிலை-2) சுரேந்திரகுமார், சிவக்குமார சிவாச்சாரியார், ஊர்த்தலைவர்கள் பழனிசாமி (ராயம்பாளையம்), தினேஷ்குமார் (புதுப்பாளையம்) உட்பட பலர் பேசினர்.