கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சனூர் கிராமத்தில், புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி வெகு கோலாகலமாக நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்த மஞ்சனூர் கிராமத்தில், உலகின் ஒளி திருச்சிலுவை கொடியேற்றத்துடன் விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு ஜெப வழிபாடு நடந்தது. தொடர்ந்து, தினமும் கிறிஸ்தவ சொற்பொழிவு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை வரை நான்கு மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், செபஸ்தியாரின் சொரூபம் ஏந்திய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி வெகுகோலாகலமாக நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர். ஒவ்வொரு வீட்டிலும் செபஸ்தியாருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தினையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். ஏற்பாட்டை புனித செபஸ்தியார் ஆலய பரம்பரை கோவில்பிள்ளைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., தமிழ்ச்செல்வன் உத்தரவின்பேரில், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் 100 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.