திரிவிக்ரம சுவாமி கோவிலுக்கு சொந்தமான இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்து எங்கே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2013 11:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் திரிவிக்ரம சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெங்கடேசன் எம். எல்.ஏ., வலியுறுத்தினார். தமிழக சட்டசபையில் நடந்த மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசன் பேசியதாவது:திருக்கோவிலூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. திரிவிக்ரம சுவாமி கோவிலுக்கு பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இவை ஜீயர் மடத்தின் மீதும், ஜீயர் மீதும் உள்ளது. இவை இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் என தெரிய வருகிறது. அந்த சொத்துக்கள் 99 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டதாகவும், நிறைய சொத்துக்கள் விற்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளி வருகின்றன. குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற வழிவகை இருந்தால், நிச்சயமாக அங்கே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்த, யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். அனைத்தும் அந்த பகுதியில் இருக்கிற முக்கிய பிரமுகர்களிடத்தில் இருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு விழுப்புரம் கலெக்டராக இருந்த கோபால், இது சம்மந்தமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு என்ன ஆனது என தெரியவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். இப்பிரச்னையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்க வேண்டும். இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசினார்.