குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஒரு மாத காலம் நடக்கிறது. குன்னூரில் உள்ள பிரசித்த பெற்ற தந்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு மாதத்திற்கு சித்திரை திருவிழா நடக்கும். 140 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலின் நடப்பாண்டின் சித்திரை திருவிழா, கர்னாடக மாநில சாகத்ய சங்கத்தார் உபயத்துடன், இன்று இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ நற்பணி மன்றத்தார் சார்பில் நடத்தப்படவுள்ளது. 15ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், தாசபளஞ்சிக சமூகத்தார் சார்பில் வரும் 16ம் தேதி பகல் 12:00 மணிக்கு நடத்தப்படுகிறது. வரும் 17ம் தேதி 86ம் ஆண்டு பரிவேட்டை, 18ம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 19ம் தேதி கேரள சேவா சங்கத்தார் சார்பில் முத்து பல்லக்கு உற்சவம், 20ம் தேதி குன்னூர் நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடத்தப்படுகின்றன. வரும் 21ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை பல உபயதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே மாதம் 9ம் தேதி இரவு 7:30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.