பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறும் இரண்டு நாட்கள் மட்டும், அவிநாசி வட்டாரத்தில் உள்ள மதுக்கடைகளில் மதுபானம் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிவாலயங்களில் சிறப்பு பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது; 23, 24ம் தேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அரசு உத்தரவுப்படி, தேரோட்டம் பகலில் நடத்தப்படுகிறது. தேரோட்டத்தின்போது, மக்கள் கூட்டம் அதிகரிக்கும்; பெண்கள் பாதுகாப்பு கருதி, மது விற்பனைக்கு தடை விதிக்க, பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. பாரதிய கிஸான் சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தேரோட்டத்தின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மதுபோதையில் வருபவர்களால், பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவை தவிர்க்கவும், அவிநாசி பகுதியில் உள்ள மதுக்கடைகளை அன்று ஒரு நாள் அடைத்து, மதுபான விற்பனையை தடை செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார். புதுப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி, தாசில்தார் மோகனிடம் அளித்த மனுவில், "தேரோட்டத்தின்போது, பல அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்காக குடிநீர் பாக்கெட்டுகளை வினியோகிக்கின்றனர். வெயில் கொளுத்துவதால், மக்கள் நலன் கருதி, வழங்கப்படும் குடிநீர் பாக்கெட்டுகளை, அங்குமிங்கும் தூக்கி வீசுவதும், பெண்கள் மீது தெளிப்பதும் நடக்கிறது. "இதனால், தகராறு ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான காலி பாக்கெட்டுகள், சாக்கடை கால்வாய்களை அடைத்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, குடிநீர் பாக்கெட் வினியோகத்துக்கு தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்களுக்கு ஜன்னை பிடிக்கும் ராயம்பாளையம், புதுப்பாளையம் மிராஸ்தார்கள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், "அவிநாசி பகுதியின் முக்கிய விசேஷம் தேரோட்டம். அதனால், 23 மற்றும் 24ம் தேதிகளில் அவிநாசி வட்டார அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.