பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
திருநெல்வேலி: பாளை.திரிபுராந்தீஸ்வரர்(சிவன்) கோயிலில் 15ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பாளை.கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர்(சிவன்) கோயிலில் சித்திரை பெருந்திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிலிருந்து 10 நாட்கள் தொடர்ந்து காலை மற்றும் மாலைவேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கிறது. விழாவின் 6வது நாளில் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் பஞ்மூர்த்திகளுடன் 63 நாயன்மார்கள் ஆயிரம் அடியார்கள் திருமுறை விண்ணப்பம் செய்து 8 ரதவீதிகளில் வீதிஉலா நடக்கிறது. 9வது நாளில் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சித்திரை திருவிழாக்காலங்கள் முழுவதும் ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், தேவார திருமுறை புகழ் கச்சேரிகள், பக்தி கச்சேரிகள் நடக்கிறது. 15ம் தேதி இரவு 7 மணிக்கு, "தாயில்லா பிள்ளை தலைப்பில் உமா உலகநாதனின் ஆன்மிக சொற்பொழிவும், 16ம் தேதி சென்னை சுசித்ரா குழுவினரின் பக்தி மெல்லிசை நிகழ்ச்சியும், 17ம் தேதி "நால்வர்கள் தலைப்பில் கோமதி திருநாவுக்கரசு ஆன்மிக சொற்பொழிவும், 18ம் தேதி, நெல்லை சகோதரர்களின் வயலின் மற்றும் பக்தி மெல்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
19ம் தேதி, பக்தியும், பண்பாடும் வளர துணை நிற்பவர்கள் ஆண்களே! பெண்களே! என்ற தலைப்பில் பாமணியின் சிறப்பு பட்டிமன்றம், 20ம் தேதி, பாளை.திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் 63 நாயன்மார்கள் வீதிஉலா, 21ம் தேதி, மயிலாடுதுறை சோமசுந்தரத்தின் "ஆறுபடை வீடு பொம்மலாட்ட நாடகம், 22ம் தேதி புதுவை பூர்ணிமாவின் "வீனா வினோதம் மெல்லிசை கச்சேரியும் நடைபெறுகிறது. 23ம் தேதி மதுரை பொன்.முத்துக்குமரன், மயிலாடுதுறை சிவக்குமார் குழுவினரின் "திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், 24ம் தேதி சிவ சங்கரன், சேரை செல்லப்பா ஆகியோரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் சித்திரை பெருந்திருவிழாவின் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் அருள்பெற்றுச் செல்லுமாறு திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.