பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
10:04
யுகாதி என்னும் தெலுங்கு புத்தாண்டு இன்று பிறக்கிறது. சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி கொண்டாடப்பட்டது. பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்டது. அப்போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது. இந்நாளில் திருப்பதியில் விசேஷ பூஜைகள் நடக்கும். ஏழுமலையான் பவனி சிறப்பாக நடக்கும். "யுகாதிஎன்றால் "புதிய பிறப்பு. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்று தெலுங்கு மக்கள் விரும்புகின்றனர்.
இதற்கு ராமாயணக்கதை ஒன்றை உதாரணமாகச் சொல்வார்கள். ராமர் காட்டிற்கு புறப்பட்டார். மகனின் பிரிவைத் தாங்காத தாய் கவுசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம் பிடித்தாள்.""அம்மா! கணவருக்குப் பணிவிடை செய்வதே மனைவிக்குரிய தர்மம். நீங்கள் அப்பாவைக் கவனித்துக் கொண்டு இங்கேயே இருங்கள், என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார்.இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பிய போது, ""சீதா நீ அங்கே வராதே. கல்லிலும் முள்ளிலும் சிரமப்படுவாய். வேண்டாம், என்றார். ""ஸ்ரீராமா! என்ன நியாயம் இது? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பிய போது, கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள். அதே தர்மம் தானே எனக்கும் பொருந்தும்! அம்மாவுக்கு ஒரு விதி, மனைவிக்கு ஒரு விதியா! நானும் உங்களுக்கு சேவை செய்ய வேண்டுமல்லவா! நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி, அதனால் உங்களோடு வருகிறேன், என்று சாதுர்யமாக பதிலளித்தாள்.ராமரால் பேச முடியவில்லை. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார்.
கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன், குடும்பத்துக்காக பிள்ளைகள் என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது. யுகாதியன்று இதுபோல ராமாயண சம்பவங்கள் தெலுங்கு தேசத்தில் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்போம்.