கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேர் கொட்டகை சரி செய்யப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2013 11:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேர் கொட்டகை சரி செய்யப்படாததால் தேர் வீணாகி வருகிறது. கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 9ம் தேதி சித்திரை பெருவிழா துவங்கியது. தொடர்ந்து 16ம் நாள் அழுகளம் நிகழ்ச்சியின் போது தேரோட்டம் நடக்கிறது. பின், தேரின் பீடம் காளிக் கோவில் அருகில் நிறுத்தப்படும். இதன் மீது மழைத்துளிகள் விழுந்ததும் கோவிலுக்கு எடுத்துச்சென்று கொட்டகையில் நிறுத்துவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேர் நிறுத்தும் கொட்டகை சரி செய்யப்படாமல் மேற்கூரைகள் இல்லாமல் பழுதடைந்துள்ளது. இத்துடன் இந்த இடத்தில் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியின் போது அரவான் சிரசுக்கு வர்ணங்கள் தீட்டப்படும். முக்கியத்துவம் வாய்ந்த இக்கொட்டகை பராமரிப்பின்றி கிடப்பதால் தேர் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணாகிறது. வரும் 23ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியும், 24ம்தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. விழா நடப்பதற்குள் தேர் நிறுத்தும் கொட்டகையை சீரமைப்பதுடன் பெரியசெவலை முதல் கோவில் வரை படுமோசமான சாலைகளை சீரமைக்கவும், கோவில் முதல் பந்தலடி வரை அடிப்படை வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.