பதிவு செய்த நாள்
13
ஏப்
2013
11:04
நாகர்கோவில்: கொல்லங்கோடு, பத்திரகாளி அம்மன் கோயிலில், நடந்த தூக்கத் திருவிழாவில், ஒரே நாளில், 1663 குழந்தைகளுக்கு, தூக்க நேர்ச்சை, நடந்தது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, பத்திரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டுதல் செய்து, குழந்தை பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை மூன்று வயதுக்குள் நேர்ச்சை கடனை செலுத்த, தூக்க மரத்தில் ஏற்றுகின்றனர். தூக்கக்காரர்கள் என, அழைக்கப்படும் பக்தர்கள், நேர்ச்சைக்கான குழந்தைகளை, கையில் தாங்கிய படி, 60 அடி உயர தூக்கமரத்தில் தொங்கிய படி, கோயிலை வலம் வருவர். இவ்வாறு, குழந்தைகளை ஏந்திய படி, தொங்கும், தூக்கக்காரர்களை, மருத்துவக்குழு பரிசோதனைக்கு பின், தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்யப்பட்டவர், ஆறு நாட்கள் கோயிலில் தங்கி, அங்கு கொடுக்கும் உணவு வகைகளை மட்டுமே, சாப்பிடுகின்றனர். இவர்கள், ஆறு நாட்களும் கடலில் குளித்து, ஈரத்துணியுடன் கோயிலை சுற்றிவந்து, தரையில் குப்புறப்படுத்து தேவியை வணங்குகின்றனர். இது நமஸ்காரம் என்று, அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தூக்கத்திருவிழா, நேற்று நடைபெற்றது. தேர் அமைப்பு கொண்ட தூக்க வண்டியில், நான்கு தூக்க வில்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு வில்களிலும், நான்கு தூக்கக்காரர்கள், துணியால் கட்டப்பட்டிருந்தனர். இவர்கள், கைகளில் குழந்தைகள் கொடுக்கப்பட்டதும், தூக்கவில் வானை நோக்கி உயர்கிறது. இதை தொடர்ந்து, தூக்கதேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு கோயிலை வலம் வருகிறது. இந்த முறையில், 1663 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை கழிக்கப்பட்டது. 416 முறை இந்த தேர், கோயிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.