பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
11:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் துணை கோவில்களில், கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருத்தணி முருகன் கோவில் துணை கோவில்களில் ஒன்றான பக்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த, 14ம் தேதி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.
கலசங்கள் ஊர்வலம்: கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள் அமைக்கப்பட்டு, 108 கலசங்கள் வைத்து ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை, 9:30 மணிக்குள் பக்த கன்னியம்மன் கோவில் விமான கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, கன்னிகைகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதேபோல், முருகன் கோவிலின் மற்றொரு உபகோவிலான அகோர வீரபத்ரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று யாக சாலைகள் அமைத்து, 18 கலசங்களுடன், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டது.
சிறப்பு பூஜை: காலை, 7:00 மணிக்கு இரண்டாம் யாக பூஜை முடிந்து, தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணியில் இருந்து, 9:30 மணிக்குள்ளாக கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பகல், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. விழாவில், திருத்தணி முருகன் கோவில் தர்க்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.