பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
11:04
சென்னிமலை: சிவன்மலை முருகன் கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்படி, பென்சில் வைத்து பூஜை நடக்கிறது. இதனால், பள்ளிக்கல்வி சிறப்பானதாகவோ அல்லது பெரும் சிக்கலையோ சந்திக்க நேரிடும் என, சிவன் மலை முருக பக்தர்கள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், மூலவராக வீற்றிருக்கும் சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் வந்து சொல்லும் பொருட்கள், கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து, சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். கடந்த, நவ., 4 ல், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது கனவில் வந்த முருகக் கடவுள், ஐந்தாம் வகுப்பு ஆங்கில புத்தகம் மற்றும் பிளஸ் 1 தமிழ் உரையை வைத்து பூஜிக்க உத்தரவிட்டார். நவ., 5 முதல், சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், ஐந்தாம் வகுப்பு ஆங்கில புத்தகம் மற்றும் பிளஸ் 1 தமிழ் உரை வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருச்சி மாவட்டம், மேலசீனிவாச நல்லூரை சேர்ந்த, அருள்ஜோதி என்பரது கனவில் வந்த சிவன்மலை முருகப் பெருமான், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில் வைத்து பூஜிக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அருள்ஜோதி, திருக்கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து, முறைப்படி பூ உத்தரவு கேட்டு, ஏப்., 15 முதல், பென்சில் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. தொடந்து 2 வது முறையாக, பள்ளி தொடர்புடைய பொருட்கள் வைத்து, பூஜை நடப்பதால், தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை சிறப்பாக இருக்கும் அல்லது சிக்கலை சந்திக்கும் என, சிவன் மலை முருக பக்தர்கள் தெரிவித்தனர். சில ஆண்டுக்கு முன், விபூதி வைத்து பூஜை நடந்த போது, தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு பூஜை நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், ஆற்று நீர் வைத்துப் பூஜை செய்த போது, காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னையும்; துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, கார்கில் போரும் நடந்தது. சிவன்மலையில் பென்சில் வைத்து பூஜை நடப்பதால், மாணவ, மாணவியர் கலக்கத்தில் உள்ளனர்.