பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
10:04
அரசு பொறுப்பு சொத்தாட்சியகத்தின் கீழ் உள்ள, சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவிலை, பராமரிப்பதற்கான "டேவணி தொகையாக, 54 லட்சம் ரூபாய் செலுத்தி, ஏலம் எடுத்திருக்கிறது, சென்னையில் உள்ள ஒரு அறக்கட்டளை.
எல்லை காத்த சாமி: கடந்த, 1860ம் ஆண்டு, இப்போதைய தலைமை செயலக இடத்தில், கோட்டை சாமியாக அருள் பாலித்து வந்தார் முனீஸ்வரன். பின், 80 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவன் பணிமனையின் முன்பக்கம் மாற்றப்பட்டார்.அந்த காலகட்டத்தில், பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு, "பாடி கட்டும் வேலைகள் நடந்தன. அதே போல், ரயில் பெட்டிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் நடந்து வந்தது.இரண்டு இயந்திர வாகனங்களுக்கும், பாடிகட்டும் இடத்தில் இருந்ததால், முனீஸ்வரனுக்கு, பாடிகாட் முனீஸ்வரன் என்ற பெயர் வந்தது.
புது வாகனம்: சென்னையில், புது வாகனம் வாங்கியோர், ஆர்.டி.ஓ., அலுவலகம் போவதற்கு முன்பாக, பல்லவன் இல்லத்தின் அருகில் உள்ள, பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்கே முக்கியத்துவம் கொடுப்பர்.புது வாகனம் வாங்கிய பின், இங்கு பூஜை செய்தால், வாகனத்திற்கு விபத்தே ஏற்படாது என்பது, சென்னைவாசிகளின் நம்பிக்கை. வேன், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாய் பூஜை கட்டணமும், இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாயும் முனீஸ்வரன் கோவிலில்வசூலிக்கப்படுகிறது.
குவார்ட்டர் அபிஷேகம்: மேலும், சிறப்பு அபிஷேகம் செய்ய, 1,500 ரூபாய் கட்டணம் வ‹லிக்கப்படுகிறது. இதில், மதுபான "குவார்ட்டர் குளியலும், சந்தன காப்பும் தான் சிறப்பு. இப்படி, தினமும், 30க்கும் மேற்பட்ட அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.அபிஷேகத்தில், பக்தர்கள் கொண்டு வரும் குவார்ட்டரில் குளிப்பது, முனீஸ்வரனுக்கு, முக்கிய சடங்கு. தினமும் மதுபான அபிஷேகம் நடந்தாலும், துளியளவு வாசம் கூட, வெளியில் வருவதில்லை. அபிஷேகத்திற்கு பிறகு சாத்தப்படும் சந்தனகாப்பே இதற்கு காரணம் என்கின்றனர், கோவில் பணியாளர்கள்.இங்குள்ள முனீஸ்வரனின் கடைக்கண் பட்டால், கண் திருஷ்டி முறிந்து விடும் என, பக்தர்கள் நம்புவதால், திருஷ்டி நீக்க, கறுப்பு, சிவப்பு கயிறுகள், கண் திருஷ்டி கீ செயின் என, பல வியாபார பொருட்கள், அமோகமாக விற்பனையாகி வருகின்றன.பெரும்பாலும், வாகனத்துக்கு பூஜை செய்ய வருவோர், மறக்காமல் கண் திருஷ்டி கயிறையும் வாங்கி செல்வர்.
ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு...: மேலும், எலுமிச்சை, அபிஷேக பொருட்கள், பூ, பழம் என, ஒவ்வொரு பொருளும், விற்பனைக்குரிய பொருளாகவே இருக்கிறது. எனவே, கோவில் மூலம் வரும் அதிகப்படியான வருமானத்தை, எதிர்பார்த்தே, தயங்காமல் ஏலம் எடுக்கப்படுகிறது. கடவுள், நம்பிக்கை, வருமானம் என்பதை தாண்டி,கோவில் வருமானத்தின் ஒரு சதவீதம், போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு செல்கிறது. முனீஸ்வரன் அப்போது மட்டுமல்ல, இப்போதும், தம் பக்தர்கள் மூலமாகஎல்லையை காத்து கொண்டிருக்கிறார் என்கின்றனர், கோவில் பணியாளர்கள்.
ஏலத்தில் சாதனை: இந்த கோவிலில் ஆண்டு தோறும், கோவில் பராமரிப்புக்காக, ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்தாண்டு, இந்த ஏலம், 49 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. இந்தாண்டு, ஏல தொகை, 50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்தாண்டு ஏலத்தை எடுத்த, தனியார் அறக்கட்டளையே இந்தாண்டு ஏலத்தையும், 54 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது.ராஜகோபுரம், பல்வேறு சன்னிதிகள் அடங்கிய பெரிய கோவில்களை மிஞ்சும் வகையில், சாலையோரத்தில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவில், ஏலத்தில் சாதனை படைத்திருக்கிறது.
- நமது நிருபர் -