பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
11:04
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு, ஆண்டு தோறும் குத்தகைக்கு விடப்படுகிறது. கடந்த முறை நடந்த ஏலத்தில், வாகன சுங்க வசூல் கட்டணம் வசூலிப்பது மட்டுமே, கூடுதல் தொகைக்கு ஏலம் போனது. கடந்த ஆண்டு, 3.45 லட்ச ரூபாய்க்கு விடப்பட்ட வாகன வசூல், இந்த ஆண்டு, 3.98 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மற்றவை உரிய தொகை ஏலம் கேட்காததால், ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.இரண்டாவது முறையாக நேற்று, கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடந்த ஏலத்தில், கோவிலுக்கு சொந்தமான கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை கடை, ராஜகணபதி கோவில் சூறைத்தேங்காய் எடுப்பது, வாகன பூஜை, காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதக்கடை, சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில் உள்ள தென்னை மகசூல் உள்ளிட்ட எட்டு இனங்களுக்கு ஏலம் அறிவிக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு ஆண்டும், 10 முதல், 15 சதவிகிதம் அதிகமாக ஏலத்தொகை இருந்தால் மட்டுமே, ஏலம் விடப்படும். நேற்று, அனைவருமே, குறைவாக ஏலம் கேட்டதால், ஏலம் முடிவுக்கு வரவில்லை. அதனால், ஏப்ரல், 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.