பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு, நேற்று காலை அம்மனும், சுவாமியும் மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபத்தில் எழுந்தருளினர். அபிஷேகத்திற்கு பின், அம்மனுக்கு பரிவட்டம் மட்டும் சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலுக்கு புறப்பாடு நடந்தது. இரவு 7.30 மணி முதல், அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில், திருமலை நாயக்கர் வழங்கிய ரத்தன கிரீடத்திற்கு, அபிஷேகம் நடந்தது; அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பரிவட்டமும், வெற்றிக்கு அறிகுறியாக வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனின், அரச பிரதிநிதியாக கருதப்படும், கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன், அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் அம்மனிடம் வழங்கினார். இரவு 9 மணிக்கு மேல், அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வந்தார். நேற்று துவங்கிய அம்மன் அரசாட்சி, ஆவணி மாதம் வரை நடக்கிறது. இன்றிரவு திக்குவிஜயம் நடக்கிறது.