பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
அவிநாசி: தேவாரம், திருவாசகம் ஓதுவா மூர்த்திகள் இசைக்க, வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களையும் ஓத, சிவகண பூத வாத்தியங்கள் முழங்க, முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிய, 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம், அவிநாசியில் கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற, கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான, 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம், நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு துவங்கியது. முன்னதாக, நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவாரம், திருவாசகம் முற்றோதல் பாராயணத்தை ஓதுவாமூர்த்திகள் மேற்கொண்டனர். கோவில் வளாகத்தில், விநாயகர் (மூஞ்சூறு), சோமாஸ்கந்தர் (ரிஷப வாகனம்), கருணாம்பிகை அம்மன் (காமதேனு), சண்டிகேஸ்வரர் (ரிஷபம்), சுப்ரமணியர் (மயில்) ஆகிய பஞ்சமூர்த்திகள், தங்களது வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள், "நமசிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க என கோஷமிட்டு வழிபாடு செய்தனர். வேத பாராயண நிகழ்ச்சிக்குபின், சிவகண பூதவாத்தியங்கள் முழங்கி, மகா அலங்கார தீபாராதனை நடந்தது. பெரிய தேர் நிலையம் அருகே சிறப்பு பூஜைகளுக்குபின், 63 நாயன்மார்கள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 10.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. கரூர் பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார்கள் குழுவினர், சிவகண பூத வாத்தியங்களை இசைத்தனர். வீதியுலாவுக்குபின், அதிகாலை 2.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் கோவிலை சென்றடைந்தனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், ரத வீதிகளில் குடைகள் கட்டப்பட்டு, மின் அலங்காரம், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கோவில் வளாகத்தில், சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப் பூர், அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை தேரோட்டம்: தேரோட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கிறது. மடாலய ஆதீனங்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறையினர், முக்கிய பிரமுகர்கள் தேர்வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். தேருக்கு முன்னும், பின்னும் புல்டோசர்களை வைத்து இயக்க, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர், கரிவரதராஜ பெருமாள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. தேர்களுக்கு "ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
அன்னதான கமிட்டி கூட்டம்: தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி ஆலோசனை கூட்டம், விஸ்வகர்ம திருமண மண்டபத்தில் நடந்தது. கமிட்டி தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், சித்திரை தேர்த்திருவிழா தேரோட்டத்தன்று, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேரோட்ட நாளன்று (நாளை) மேற்கு ரத வீதியில் உள்ள விஸ்வகர்ம திருமண மண்டபத்தில், காலை 11.00 மணிக்கு துவங்கி, மதியம் 3.00 மணி வரை, 12 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், அதற்காக, வரிசை கட்டுதல், சுகாதார ஏற்பாடுகளை செய்தல் என முடிவு செய்யப்பட்டது. கமிட்டி பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.