பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும், பிரம்மோற்சவ விழாவில், நேற்று வெள்ளி தேரோட்டம் நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும், காலை மற்றும் இரவு ஆகிய இருவேளைகளில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வாகனங்களில் எழுந்தருளி, மலைக்கோவிலில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின், 7ம் நாளான நேற்று இரவு, 7:30 மணிக்கு மலைக்கோவிலில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர், கோவில் குருக்கள் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தினார். இரவு, 8:00 மணிக்கு வெள்ளித் தேர் மாடவீதியில் திருவீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். இன்று, காலை, 9:30 மணிக்கு யாளி வாகனம், இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் உலா வந்து அருள்பாலிக்கிறார், இரவு, 8:00 மணிக்கு தெய்வானை அம்மையார் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.