பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
ஓசூர்: தேன்கனிக்கோட்டை பேட்டராய ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா கோஷத்துடன் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற, சவுந்தரவள்ளி சமேத பேட்டராய ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.நேற்று காலை, ஓசூர் சப்-கலெக்டர் பிரவீன் நாயகர், அண்ணா தொழிற்ச்சங்க மாவட்ட செயலாளர் மாதேவா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் பேட்டராய ஸ்வாமி, சவுந்தரவள்ளி தாயார் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேன்கனிக்கோட்டை, ஓசூர், கெலமங்கலம், தளி மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் நாகேஷ், துணைத்தலைவர் ராமு, தளி முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தன், அறநிலையத்துறை உதவி செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாலை தேர்நிலையை வந்தடைந்தது.தேர் மீது பக்தர்கள், பழம், பூக்களை வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். குழந்தை இல்லாத பெண்கள், தேர்த்திருவிழாவில் வழங்கிய கொடி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள், தன்னார்வ அமைப்பினர் நீர் மோர் பந்தல் அமைத்து இலவசமாக நீர், மோர் வழங்கினர். அன்னதானம் வழங்கினர். ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில், கிருஷ்ணதேவராயர் மன்னர் கட்டிய தட்சணதிருப்பதி வெங்கடேஷ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 1882ம் ஆண்டு முதல் இக்கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. இந்த கோவில் தேர் கல் சக்கரத்தில் ஆன, 46 அடி உயரம் கொண்டது.நேற்று நடந்த தேர்த்திருவிழாவில், ஓசூர், சூளகிரி, கோபசந்திரம், அழியாளம், உத்தனப்பள்ளி உள்பட, 93 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.