மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடத்தப்படும். இதில் வரும் 23ம் தேதி நடக்கும் திருக்கல்யாணவிழா சிறப்பானதாகும். விழாவில், மணமகன் சிவனின் அலங்காரத்தை குபேரன் செய்வதாகவும், மணமகள் மீனாட்சியை மகாலட்சுமி அலங்கரிப்பதாகவும், பிரம்மா வைதீகச் சடங்குகளை நடத்துவதாகவும் ஐதீகம். இத்திருமண வைபவம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏப்.23ல் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் புறப்பட்டு மண்டகப்படிகளுக்கு எழுந்தருள்வர். பின் மீனாட்சி கன்னி ஊஞ்சலில் மணப் பெண்ணாக காட்சியளிப்பாள். ஆடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் மணமக்களாக வீற்றிருந்து அருள்புரிவர். மணமகன் சுந்தரேஸ்வரரின் இடப்புறம் திருப்பரங்குன்றம் முருகனும், மீனாட்சியின் வலப்புறம் பவளக்கனி வாய்ப் பெருமாளும் எழுந்தருள மணவிழா தொடங்கும். விக்னேஸ்வரர் பூஜை,ரட்சா பந்தன், கும்ப பூஜை, யாத்ரா தானம், பாலிகா பூஜை, தாரை வார்த்தல் முடிந்ததும், கெட்டிமேளம் முழங்க சுவாமி, மீனாட்சியன்னையின் மங்கலக் கழுத்தில் மாங்கல்யம் அணிவிப்பார். அப்போது, பெண்கள் தங்களின் மாங்கல்யத்தை புது மஞ்சள் கயிற்றில் மாற்றுவது வழக்கம்.