பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சித்ரா பவுர்ணமி முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், மகா வராஹி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், கருவூரார் சித்தர் உள்ளிட்ட அனைத்து ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில், சுப்பிரமணியர் மட்டும் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல், பூக்காரத்தெரு சுப்ரமணியருக்கு காலையில் பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் விபூதி அலங்காரத்தில் காட்சியளித்தார்.கீழவாசல் குறிச்சி முருகன் கோவில், வெள்ளை விநாயகர் கோவில், மேலவீதி சங்கரநாராயணன் கோவில், கொங்கனேஸ்வரர் கோவில், காசிவிசுவநாதர் கோவில், மகர்நோம்புச்சாவடி சண்முகநாதர் கோவில், திட்டை வசிஸ்டேஷ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகன் பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து விபூதி அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார்.அகத்திய சன்மார்க்க சங்கத்தினர் சார்பில், பெரியகோவில் உள் வளாகத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது.ஆனால், பெரியகோவில் உள் வளாகத்தில் அன்னதானம் வழங்கினால் கோவில் வளாகம் அசுத்தம் அடைந்து விடுகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது என கூறி தொல்லியல் துறையினர் பெரியகோவில் உள் வளாகத்தினுள் அன்னதானம் வழங்க தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து பெரிய கோவில் அருகே நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான பெத்தண்ணன் கலையரங்கம் எதிரே பிரம்மாண்ட பந்தல் அமைத்து 1,008 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.அதேபோல், பெரியகோவில் முன் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தினரும் சிறிய அளவில் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்கினர். வழக்கமாக 8.30 மணிக்கே தஞ்சாவூர் பெரியகோவில் நடை சாத்தப்படும். ஆனால், நேற்று இரவு சந்திர கிரகணம் என்பதால் இரவு 7.30 மணிக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பெருவூடையார் உள்ளிட்ட அனைத்து ஸ்வாமி சன்னிதி கதவுகளும் அடைக்கப்பட்டது.