பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி ஸ்வாமி கோவிலின் சித்திரை பெரிய தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது.மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.இக்கோவிலின் சித்திரை தேரோட்டம் தமிழகத்தில் உலாவரும் மூன்று முக்கிய தேர்களில் ஒன்றாகவும், திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ்பெற்றதாகும்.இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் சித்திரை பெரிய தேரும், சிறிய தேரும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழாவின்போது பெரிய தேரும், தை முதல்நாளான பொங்கல் திருநாளில் சிறிய தேரும் நடப்பது வழக்கம்.இப்பெரிய மரத்தேரின் எடை, 500 டன் ஆகும். தேரின் அடிப்பாகம், 25 அடியாகவும், மேல்தட்டு, 35 அடியாகவும், உயரம், 30 அடியாகவும் உள்ளது. இத்தேரை அலங்கரிக்கப்படும்போது, 110 அடியாக இருக்கும்.அதன்படி, இவ்வாண்டு சித்திரை தேரோட்ட பெருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 17ம் தேதி முதல் விழா நாட்களில் பெருமாள், உபயநாச்சியார்களுடன் வெள்ளியிலான இந்திர, சூரியபிரபை, சேஷ, கருட, ஹனுமந்த, மங்களகிரி, பின்னைமர, குதிரை வாகனங்களில் வீதிவுலா புறப்பாடு நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட பெருவிழா நேற்று (25ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துச் சென்றனர்.தேரோட்ட விழாவில் எம்.எல்.ஏ., அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன், நகர்மன்ற தலைவர் ரத்னா, துணைத்தலைவர் ராஜாநடராஜன், அறநிலையத்துறை மயிலாடுதுறை சரக இணை கமிஷனர் சாமிநாதன், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், அனைத்து கோவில் நிர்வாக அதிகாரிகள், குடந்தை அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், தமிழ்நாடு வர்த்தகர் நலக்கழகத்தலைவர் கணேஷ், குடந்தை வர்த்தக சங்க தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.