பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
திருப்பூர்: எமதர்மராஜாவின் தலைமை கணக்கராக இருந்து, மக்களின் புண்ணிய, பாவங்களை கணக்கிடும், சித்ரகுப்தருக்கு, திருப்பூர் மாநகரம் சின்னாண்டிபாளையத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோவில் உள்ளது. சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி திதியில் பிறந்த சித்ரகுப்தருக்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். நேற்று சித்ரா பவுர்ணமி பூஜை விமரிசையாக நடந்தது. கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, சித்ரகுப்தருக்கு, திருநீறு, மஞ்சள், இளநீர், தசாங்கம், பால், பன்னீர், பழச்சாறு, தேன் என 32 வகையான திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. வெண்பட்டு, தலைப்பாகை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அவருக்கு, கரும்பு, ஒப்புட்டு, இட்லி என 32 வகையான உணவு பதார்த்தங்கள் படையல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள், அபிஷேகம், பூஜைகளை நடத்தினார். விழாவை முன்னிட்டு, காலை 7.00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. சித்திரை மாதம் முழுவதும், தினமும் காலை 6.00 மணி; மதியம் 12.00 மணி; இரவு 7.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.