பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
11:04
தலைவாசல்: தலைவாசல் அருகே, மழை வேண்டி, பெண்கள் ஒப்பாரி வைத்தபடி, கொடும்பாவி உருவ பொம்மை இழுத்துச் சென்று, வினோத பூஜை செய்தனர்.ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில், விவசாயம், அதன் உப தொழிலான கால்நடை வளர்ப்பு அதிகளவில் உள்ளன. இந்நிலையில், பருவ மழை பொய்த்து போனதால், ஆறு, ஏரி, அணை, விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போயின.மேலும், சுட்டெரிக்கும் வெயில் தொடர்வதால், விளை நிலத்தில் பயிர் சாகுபடி செய்வது கேள்விக்குறியாக உள்ளது. அதனால், ஆத்தூர் பகுதியில் உள்ள, சிவன், அம்மன், பெருமாள் கோவில்களில் மழை வேண்டி, சிறப்பு யாகம், பூஜை, அபிஷேகம் செய்தும், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.அதன்படி, தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில், சித்ரா பவுர்ணமி நாளில், சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, அருள் வந்து ஆடிய பெண்கள், "கொடும்பாவி கட்டி இழுத்தால், மழை வருவதுடன், ஊர் செழிப்பாகவும், துர் மரணங்கள் நிகழாது எனக் கூறினர்.அதையடுத்து, ஐந்து அடி உயரத்தில் களிமண், வைக்கோல் கலந்து கொடும்பாவி செய்தனர். நேற்று மதியம், 1 மணியளவில், கொடும்பாவி உருவ பொம்மைக்கு, இரண்டு முட்டைகளை கண்களை போன்று வடிவமைத்தும், மஞ்சள் சேலை அணிவித்தபடி, மேள தாளத்துடன், அனைத்து வீதிகளிலும் இழுத்துச் சென்றனர்.அப்போது, 20க்கும் மேற்பட்ட பெண்கள், மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். மாலை, 4 மணியளவில், கொடும்பாவி பொம்மையை, மயானத்தில் எரியவிட்டு, தெரு மற்றும் வீடுகளை சுத்தம் செய்து, மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை சமைத்து, பக்தர்களுக்கு கூழ் ஊற்றி, பூஜை செய்தனர். சதாசிவபுரம் கிராம பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.