பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
11:04
சந்தான வேணுகோபாலபுரம்: சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று மோகினி அவதாரம் எடுத்த வேணுகோபாலசுவாமி, நாச்சியார் பல்லக்கில் வீதியுலா வந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த சந்தான வேணுகோபாலபுரத்தில், வேணுகோபால சுவாமி கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில், மூலவர் வேணுகோபால சுவாமி, பசுவின் மீது சாய்ந்து, புல்லாங்குழல் வாசித்தபடி, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தை ஒட்டி, அம்ச வாகனம், சிம்மம், அனுமன், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினார். நேற்று காலை, மோகினி அவதாரம் எடுத்த பெருமாள், நாச்சியார் பல்லக்கில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியான கருட வாகன சேவை, நேற்று மாலை நடந்தது. இதில், சமத்துவபுரம், டி.சி.கண்டிகை, கே.ஜி.கண்டிகை, வங்கனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் புதன் கிழமை தேர் திருவிழா நடைபெறும். வியாழன் அன்று பந்து விளையாடல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.