பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
10:04
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி, அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகரை கோவிந்தா கோஷம் முழங்க, மலர் தூவி, திருஷ்டி சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் துவங்கியது. ஏப்., 23ல் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். ஏப்., 24ல் எதிர்சேவை நடந்தது. ஏப்., 25ல் ஆற்றில் இறங்கினார். பின், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி முன் எழுந்தருளினார். கள்ளழகருக்கு அணிவித்திருந்த மாலைகள், கருப்பண சுவாமிக்கு சாத்தப்பட்டன. பின், தீப ஆராதனைகள் நடந்தன. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை "கோவிந்தா கோஷம் முழங்க, பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். பின் 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி, 3 முறை அழகரை சுற்றி திருஷ்டி கழித்தனர். பின், கோயிலுக்குள் சென்ற அழகருக்கு தீப ஆராதனை நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.