பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
12:04
அக்னி நட்சத்திரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாமா கூடாதா என்ற குழப்பம் பலரிடமும் இருக்கிறது. சுபநிகழ்ச்சிகள் நடத்த சாஸ்திரம் தடை விதிக்கவில்லை என்கிறார் மதுரை செல்லூர் (திருவாப்புடையார் கோயில்) ஜோதிடர் எஸ்.ஐயப்பன். இதோ! அவரது கருத்தைக் கேளுங்கள். மே4 முதல் 28 வரை 25 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும். இந்த சமயத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும். காரணம், இந்த காலகட்டத்தில் மேஷராசியில், பரணி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும். இது சூரியனுக்கு உச்சவீடு என்பதால் உஷ்ணம் தாராளமாய் இருக்கும். இந்த சமயத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம். தமிழ் தேதிப்படி, சித்திரை 21ல் தொடங்கும் அக்னிநட்சத்திரம் வைகாசி 14ல் முடிகிறது. இதில் இந்த ஆண்டு சித்திரை முகூர்த்தம் மூன்றும், வைகாசி முகூர்த்தம் ஆறுமாக 9 சுப நாட்கள் உள்ளன. அவை மே 6, 12,13,15,16, 20,22, 23,27. அதில் 6,27 தவிர மற்றவை வளர்பிறை முகூர்த்தங்கள். சித்திரையில் செல்லக்கல்யாணம் என்றே ஒரு சுலவடை உண்டு.
ஒரே பிள்ளை இருப்பவர்கள் சித்திரையில் அவர்களுக்கு திருமணம் நடத்துவது வழக்கம். பருவகாலத்தில் சித்திரை, வைகாசி மாதத்தை வசந்த ருது என்பர். இந்த மாதத்தில் திருமணம் மட்டுமில்லாமல் வளைகாப்பு, காதுகுத்துதல், பூப்புனித நீராடல் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்த கால கட்டத்தில் வரும் அக்னி நட்சத்திர காலத்திலும் இவற்றை நடத்தலாம். புதுமனை புகுவிழா மட்டும் அக்னி நட்சத்திர காலத்தில் நடத்த சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. காலங்களில் நான் வசந்தம் என்று கண்ணன் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். கனகதாரா ஸ்தவம் பாடிய சங்கரருக்காக லட்சுமி தங்க மழை பெய்வித்த அட்சயதிருதியை நன்னாள் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வருகிறது (இவ்வாண்டு மே 13) லட்சுமிக்குரிய இந்த நாளில் தங்கம் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். சுபநிகழ்ச்சி நடத்த, வியாபாரம் துவங்க ஏற்ற நாள் இது. அக்னி நட்சத்திர காலத்தில் அட்சய திரிதியை வருகிறதே என்பதற்காக இந்த நிகழ்ச்சிகளை யாரும் ஒத்தி வைப்பதில்லை. முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாக திருவிழாவும் இந்த காலத்திலேயே கொண்டாடப்படுகிறது. கோயில்களில் வசந்தவிழா இந்த காலகட்டத்தில் தான் நடக்கும். இந்த சமயத்தில் சிவனுக்கு தாராபிஷேகம் செய்து குளிர்விப்பது வழக்கம். இப்படி ஆன்மிக ரீதியாகவும் அக்னிநட்சத்திரகாலம் சிறப்பு மிக்கதாக உள்ளது. வசந்த காலமான இப்பருவத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் வாழ்வில் வசந்தம் வீசுவது நிச்சயம்.