பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
10:04
பொள்ளாச்சி: கிராமப்புற கோவில், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களுக்கும் திருப்பணிகள் செய்ய விரும்பும் நிர்வாகிகள், இந்துசமய அறநிலையத்துறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், நகர்புறங்களை விட கிராமங்களில் கோவில்கள் அதிகளவில் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமப்புற கோவில்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், பாழடைந்து காணப்படுகின்றன. இதுபோல், மாநிலம் முழுவதும் பல கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை புனரமைக்க வேண்டும், என, மக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையேற்று, நடப்பாண்டில் கிராமப்புற கோவில்கள், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது. இந்நிதியுடன், மக்களின் பங்களிப்பும் சேர்த்து கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பணிகளை மேற்கொள்ள விரும்பும் கோவில்கள் நிர்வாகிகள், உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும், என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராம கோவில்களையும், துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. கோவில்களில், மேற்கொள்ள தேவைப்படும் திருப்பணிகள், தற்போதுள்ள வசதிகள் குறித்த விரிவான விபரங்களுடன் கோவில் நிர்வாகிகள், வேலை நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள ஆய்வாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். கோவில்களை நேரில் ஆய்வு செய்து, தகுதியுள்ள கோவில்களுக்கு நிதி ஒதுக்கப்படும். திருப்பணிகளுக்கு தேவைப்படும் நிதியை மக்களும் நன்கொடையாக வழங்கலாம். இவ்வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.