உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 23ம் தேதி கம்பம் போடுதல், 26ல் கொடியேற்றமும் நடைபெற்றது. திருக்கம்பத்திற்கு தினமும் கிராம மற்றும் நகர பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புண்ணிய தலங்களிலிருந்து வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் புனித நீரை எடுத்து வந்து ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் எண்ணிய காரியங்களை முடித்திட வேண்டி" பூவோடு கைகளில் ஏந்தி அம்மனுக்கு வழிபாடு செய்தனர். ஒருபக்கம் தீர்த்த குடம் எடுக்கும் பக்தர்கள், மற்றொரு பக்கம் பூவோடு எடுக்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தேர்த்திருவிழாவையொட்டி, கோவிலில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. மாலை நேரங்களில், அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில், இன்று இரவு 10:00 மணியுடன் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, நாளை (மே 1ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில், குட்டைத்திடலில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தேர் பணிகள் தீவிரம் திருவிழாவையொட்டி கடந்த 26ம் தேதி தேருக்கு முகூர்த்த கால் பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, மே 2ம் தேதி தேரோட்டத்திற்காக தேர் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.