பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
10:04
திருச்சி: ஸ்ரீரங்கம் சித்திரைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் விசேஷம் என்றாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேரோட்ட திருவிழாவும் வெகு பிரசித்திப் பெற்றது.ஆயிரம் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடக்கும் விருப்பன் திருநாள் நேற்று காலை மேஷ லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலைவேளைகளில், உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் பல்வகை வாகனங்களில் எழுந்தருளி, ஆஸ்தான மண்டபகங்களில் மண்டகப்படி கண்டருள்கிறார்.விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேர் வரும், 7ம் தேதி நடக்கிறது. அதிகாலை, 4 மணிக்கு, நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்கு புறப்பாடு கண்டருள்கிறார். 4.30 மணிக்கு, சித்திரைத்தேர் மண்டபத்தை சென்றடைகிறார். அதிகாலை, 4.45 முதல், 5.15 மணிக்குள் மேஷ லக்னத்தில், நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை, 6 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. நம்பெருமாள் ரேவதி மண்டபத்தை சென்றடைந்தவுடன் மூலவர் ஸேவை துவங்குகிறது. மூலவர் சேவை ரத்து: நம்பெருமாள் காலை, மாலை திருவீதியுலாவையொட்டி, நேற்று துவங்கி, வரும் மே, 8ம் தேதி வரை விஸ்வரூப தரிசனமும், தினந்தோறும் இரவு, 8.30 மணிக்கு மேல் மூலவர் ஸேவையும் கிடையாது. 9ம் தேதிக்கு பிறகு வழக்கம்போல காலை விஸ்வரூப தரிசனமும், இரவு, 9 மணி வரை மூலவர் ஸேவை நடக்கிறது.