பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விவசாக திருவிழா, மே 16ல் காப்பு கட்டுடன் துவங்குகிறது.விழா நாட்களில் இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புஷ்ப அலங்காரத்தில், வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கு மண்டபத்தின் மையப்பகுதி மேடையின் அடிப்பாகத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மேல் பகுதியில் சுவாமி எழுந்தருளி வசந்த உற்சவம் நடக்கும். விழா உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு திருவிழா மே 25ல் நடக்கிறது. அன்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்ககுதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள திடலில் எழுந்தருள்வர். இரவு பூ பல்லக்கில் சுவாமி கோயில் திரும்புவார்.தங்கரதம் புறப்பாடு இல்லை: மே 16 முதல் 25 ம் தேதி வரை விசாக திருவிழாவை முன்னிட்டு, தங்க ரதம் புறப்பாடு இல்லை.
எதிர்பார்ப்பில் பக்தர்கள்: திருப்பரங்குன்றம் மலைக்கு "ரோப்கார் வசதி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணியசுவாமி, கற்பகவிநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் உருவங்கள் மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டு உள்ளன. மலை மீது காசி விஸ்வநாதர் கோயிலும், எதிரில் முருகப்பெருமான் சன்னதியும் உள்ளன. அங்குள்ள சுனையில் கங்கைக்கு நிகரான தீர்த்தம் உள்ளது. நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள "வேல் மூலம் மலையை கீறி, இந்த சுனை தீரத்தத்தை உருவாக்கியதாக புராணங்களில் உள்ளன. இந்நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையிலும், மழை வேண்டியும் கிராமத்தினர் சார்பில் புரட்டாசியில் கோயில் மூலவர் கரத்தில் உள்ள வேல் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் முடிந்து, பக்தர்களுக்கு கதம்ப சாதம் பிரசாதம் வழங்கப்படும். மலை மீது தர்க்காவும் உள்ளது.மலைக்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். முதியவர்கள், மலையேற முடியாமல் திரும்புகின்றனர். அங்கு 2004ல் ரோப்கார் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்தன. நிபுணர் குழுவினர் சரவணப் பொய்கை அருகே புதிய படிக்கட்டு பகுதியில் "ரோப்கார் அமைக்க இடத்தையும் தேர்வு செய்தனர். அதன்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மலைக்குப் பின் தற்போது ரூ.பல கோடியில் இரு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நலன் கருதி, "ரோப்கார் வசதியை அரசு செய்ய வேண்டும்.