பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
சென்னை: வியாசர்பாடி கோவில் திருவிழாவில் போட்டி போட்டு, ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளதால் பகுதிவாசிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.10 பெட்டிகள்வியாசர்பாடி பி.வி. காலனியில் உள்ளது பீலிக்கான் முனீஸ்வரர் ஈஸ்வரி காளியம்மன் கோவில். இந்த கோயிலில் 48ம் ஆண்டு தீமிதி திருவிழா நடக்கிறது. அதை முன்னிட்டு பி.வி.காலனி, இந்திரா நகர், ஜி.என்.டி., சாலை மற்றும் மேல்பட்டி பொன்னப்பன் தெரு என, கோவில் சுற்றுவட்டாரம் முழுவதும் இளைஞர் மன்றங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களும் அன்னதான கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மன்றத்தின் சார்பில் 10க்கும் மேற்பட்ட "ஸ்பீக்கர்கள் கொண்ட ஒலிபெருக்கி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட ஒலி, பகுதிவாசிகளை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது.சாலையோரம் வரிசையாக ஒலிபெருக்கி பெட்டிகளை அமைத்து, அவற்றில் அவரவருக்கு பிடித்த ஆன்மிக மற்றும் சினிமா "குத்து பாடல்களை ஒலிக்க வைக்கின்றனர். இதில் பெரும்பாலோர் ஆன்மிக பாடல்களை விட, சினிமா குத்து பாடல்களை ஒலிக்க விட்டு, அதற்கேற்ப ஆடியதுதான் அதிகம். இதனால் குழந்தைகளும் முதியோர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.55 டெசிபல் மட்டுமே...பொதுவாக சென்னையில் குடியிருப்பு பகுதியில் காலை, 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே ஒலி பெருக்கி, ஒலிக்க வேண்டும். அதிலும் 55 டெசிபல்களுக்கு மேல் சத்தத்தின் அளவு இருக்க கூடாது. அதே போல், வியாபார இடங்களில், 55 முதல் 65 டெசிபல் அளவுக்கு உட்பட்டு ஒலியின் அளவு இருக்க வேண்டும்.இரவு, 10:00 மணிக்கு மேல் ஒலிபெருக்கி சத்தமே கேட்க கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. இதை மீறுவோர் மீது போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வியாசர்பாடியில் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.