பதிவு செய்த நாள்
23
பிப்
2011
05:02
வடநாட்டில் உள்ள ஒரு சிற்றூரில் ஹரி அனந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர். இவரிடம் பல மாணவர்கள் படித்தாலும் ஒரு மாணவன் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். குருகுல முறைப்படி, நாள்தோறும் பிச்சைக்குச் சென்று ஒரு படி ரொட்டிமாவு கொண்டு வருவான். அதை குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்பு ரொட்டி செய்வான். அந்த ரொட்டிகளில் தாம் சாப்பிட்டது போக மீதியை மற்றவர்களுக்கு கொடுப்பான். ஒரு சமயம் கபீர்தாசின் குருவான சாது ராமானந்தர் அவ்வூரிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். பிச்சைக்குச் சென்ற மாணவன் அவரை வணங்கினான். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல, இவ்வளவு அன்பும், பரிவும், நல்ல குணங்களும் கொண்ட இந்த சிறுவன் நாளை காலையோடு ஆயுள் முடிந்து இறந்து போகப்போகிறானே என வருத்தப்பட்டு அந்தோ ! அடடா ! என்றார் ராமானந்தர். இப்படி ஒரு வார்த்தை அவரது வாயிலிருந்த வருமானால் அது ஆபத்துக்கு அறிகுறி என பொருள். இதைக்கேட்டு மாணவனுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குருவே ! நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லø. எனது மரணத்திற்கு முந்தைய தினமான இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது நான் செய்த பாக்கியத்தையே குறிக்கிறது என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வணங்கினான்.
அங்கிருந்து புறப்பட்டு குருவிடம் சென்றான். தனது ஆயுள் முடியப்போகும் விஷயத்தை குருவிடம் விளக்கினான். ஹரி அனந்தர் மாணவனை அருகில் அழைத்து, இன்றைய வேலைகளை வழக்கம் போல செய்துவிட்டு, தியானம் முடித்து தூங்கு. நாளை காலையில் அருணோதயத்திற்கு முன்னதாக என்னை எழுப்பு, என்றார். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக குருவை எழுப்பினான் மாணவன். இருவரும் நீராடி தியானம் செய்யும் சமயத்தில் மாணவனை அருகில் அழைத்த ஹரி அனந்தர், பத்மாசனத்தில் அமர்ந்தார். தனது புலன்களை ஒவ்வொன்றாய் ஒடுக்கி, சமாதி நிலைக்கு சென்றார். மாணவனும் அதே முறையில் தியானத்தில் ஆழ்ந்தான். இப்படி இருவரும் ஒரே விதமாக தங்கள் இதயத்தில் வாழும் இறைவனை தியானிக்கலாயினர். இறைவன் இவர்களது ஒப்பற்ற தியானத்திற்கு கட்டுப்பட்டவராய், சங்கு, சக்கரங்களுடன் அங்கே எழுந்தருளினார். சக்கரத்தாழ்வாரை குரு, சிஷ்யன் ஆகியோரின் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும்படி பணித்து, தானும் அங்கேயே அமர்ந்து விட்டார்.
உரிய நேரம் வந்தது. நீலவண்ணத்தில் உலகம் இருளில் மூழ்க, எருமையின் மீதேறி வந்து நின்றான் எமன். இறைவன் புன்முறுவலுடன் வீற்றிருக்க, எதிரில் குருவும், மாணவனும் மெய்மறந்து தியான நிலையில் அமர்ந்திருப்பதையும், தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை போல சக்கரம் கம்பீரமாக சுழல்வதையும் கண்டு நடுநடுங்கிப் போனான். இறைவனே இங்கு வந்து அமர்ந்திருப்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கருதிய அவன், வந்த வழியே திரும்பிப்போனான். எமன் சென்றதும் குருவும் மாணவனும் கண்விழித்தனர். இருவரையும் நெஞ்சாரத்தழுவி ஆசி கூறி மறைந்தார் கிருஷ்ண பரமாத்மா. அடுத்தநாள் வழக்கம்போல் பிச்சைக்கு, சென்றான் மாணவன். ராமானந்தரின் பாதத்தைத் தொட்டு வணங்கினான். அடடா ! பிழைத்து விட்டாயே ! என்று ஆச்சரியப்பட்டவர். நடந்தவற்றை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். உன்னைக் காப்பாற்றிய சக்திமிக்க குருவை நான் காணவேண்டும் என்றார். இருவரும் ஹரி அனந்தரின் இருப்பிடத்திற்கு வந்தனர். எமனையே வென்ற உமது பக்தி அற்புதம் ! அற்புதம் ! என பாராட்டிய ராமானந்தர் ஹரியை கண்ணால் கண்ட ஹரி அனந்தரின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக போற்றினார்.