பதிவு செய்த நாள்
11
மே
2013
11:05
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசைக்கு வந்த வாகனங்களின் பாதுகாப்பிற்காக ஐ.ஜி., தலைமையில் இரவு முழுவதும் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அக்னி கரகம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடந்தது.இதை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஒரு லட்சத்திற்கும் அதிமான பக்தர்கள் வந்திருந்தனர்.இரவு 12 மணிக்கு அக்னி குளக்கரையில் கரகம் ஜோடிக்கும் பணி துவங்கியது. அதிகாலை 3 மணிக்கு அக்னி கரகம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் வீதிகள் வழியாக 5.30 மணிக்கு கோவிலை அடைந்தது.இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சின்னத்தம்பி, மேலாளர் முனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.ஐ.ஜி., தலைமையில் பாதுகாப்பு: ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரவு நேர பஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. மேல்மலையனூர் அமாவாசை விழாவுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால், பஸ்களுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க ஐ.ஜி., கண்ணப்பன், டி.ஐ.ஜி., முருகன், எஸ்.பி., மனோகரன் ஆகியோர் மேல்மலையனூரில் இரவு முழுவதும் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்தனர். சேத்துப்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மார்க்கமாக வந்த பஸ்களின் பாதுகாப்பிற்காக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சாலை ஓரங்களில் கூடுதலாக மின் விளக்கு வசதி செய்திருந்தனர்.இந்த சாலைகளில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.பஸ் கண்ணாடி உடைப்பு:பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போதும் நேற்று முன்தினம் மாலை விழுப்புரத்தில் இருந்து மேல்மலையனூர் சென்ற சிறப்பு பஸ் மீது செஞ்சி அருகே என்.ஆர்.பேட்டையில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் பின் கண்ணாடி உடைந்தது.