பதிவு செய்த நாள்
11
மே
2013
11:05
வல்லநாடு: கீழவல்லநாடு மலை அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சலசுவாமியின் நூதன கோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கீழவல்லநாடு மலையில் விநாயகர், அபிதகுஜலம்பாள், அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சல சுவாமிக்கு தனித்தனியாக கோயில்கள் அமைக்கப்பட்டது. அருணாச்சலசுவாமிக்கு சிலையும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது. விமானமும், கருவறை, சிற்ப வடிவங்களும் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் நடந்தது. கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 5ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும் மாலையில் 3ம் கால யாகசாலை பூஜை வேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவில் யந்திரஸ்தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6ம் தேதி காலை 4ம் கால யாகசாலை பூஜை, திரவியாகுதி, ஸ்பரஸாகுதி, யாத்ராதானம்,
வேதபாராயணம் மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலையில் கும்பம் எழுந்தருளலும், தொடர்ந்து விநாயகர், அபிதகுஜலம்பாள், அருணாச்சலேஸ்வரர், அரு ணாச்சலசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமானத்திற்கும் புதிய சிலைகளுக்கும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் சங்கரானந்தா மகராஜ் சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 63 சிவனடியார்கள், கீழவல்லநாடு பஞ்.,தலைவர் சுரேஸ்காந்தி, எல்லைநாயக்கன்பட்டி பஞ்.,தலைவர் கண்ணன், வல்லநாடு பஞ்.,தலைவர் கொம்பம்மாள் ராமசாமி, பரமசிவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை வல்லநாடு வெங்கிடசுப்பிரமணியன், ரவி குசூவினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராமச்சந்திரன், இசக்கிமுத்து மற்றும் கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.