பதிவு செய்த நாள்
15
மே
2013
10:05
திருப்பூர் : தேர்களை சுற்றிலும், பாதுகாப்பு வளையம் அமைப்பது என, அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா வரும் 24, 25ம் தேதிகளில் நடக்கிறது. விழா ஏற்பாடு குறித்து, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ., பழனிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்; தேர்களுக்கு புதிதாக இரும்பு சக்கரம் அமைத்துள்ளதால், பக்தர்கள், யாரும் உள்ளே வராதபடி, தீயணைப்பு துறையினர், போலீசார் இணைந்து, தேரை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். மின் வாரியம் சார்பில், மின் வயர்களை அகற்றி, விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்; மருத்துவ குழுவினர் பணியில் இருக்க வேண்டும்; தேரோடும் வீதிகளில் பழுதடைந்த பகுதிகளை சரி செய்ய வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி, போலீஸ், தீயணைப்புத்துறை, மின்வாரியம், மருத்துவம் உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.