காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் 21ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விநாயகர் உற்சவம், 11 மற்றும் 12ம் தேதி சுப்ரமணியர் உற்சவம், கடந்த 14ம் தேதி அடியார்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது. நேற்று தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.21ம் தேதிகாலை 7.00 மணிக்கு செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர்த் திருவிழா நடக்கிறது. அதையொட்டி தேர் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. தேரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஷெட் அகற்றப்பட்டு, தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி நடக்கிறது.