பதிவு செய்த நாள்
20
மே
2013
10:05
புண்ணியம் தழைக்கச் செய்வது கங்கை நதி. தேவலோகத்தில் மந்தாகினியாகவும்; பாதாள உலகில் பாகீரதியாகவும்; பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதகா என்று போற்றுவார்கள். மகிமை வாய்ந்த கங்கை நல்லாளைக் கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பர். மிகவும் கடினமான வேலையை முயற்சியுடன் செய்து சாதிக்கும் செயலு<க்கு பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன்தான். முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான். அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து, முடிவில் பகீரதன் அதை முடித்தான். தேவலோகத்தில் இருக்கும் கங்கையை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான். அவன் தவம் கண்டு மகிழ்ந்த கங்கை, நான் பூமிக்கு வரும் அளப்பரிய வேகத்தை சிவனால் மட்டுமே தணிக்க முடியும். எனவே சிவனை வேண்டித் தவமிருந்து, என்னைத் தாங்கி பூமியில் விழச் செய்ய அவர் சம்மதம் பெற்று வா என உபாயம் கூறினாள். மீண்டும் சிவனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் காட்சி கொடுத்து, என்ன வரம் வேண்டும்? எனக் கேட்க, கங்கையிடம் பூமிக்கு வர சம்மதம் வாங்கி விட்டேன். அவள் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி பூமியில் பாயவிட வேண்டும் என்று கேட்டான். சிவனும் சம்மதித்தார். கங்கை வெகு வேகமாக பூமிக்கு வந்தாள். சிவன் தன் தலைமுடியால் தடுத்து அமைதியாகப் பாயச் செய்தார். கங்கையை பகீரதன் பாதாளத்திற்கு அழைத்துச் சென்று தன் முன்னோர் அஸ்தியைக் கரையச் செய்து, அவர்களைப் புனிதப்படுத்தியபின் கங்கையை பூமியில் பாயும்படி கேட்டுக் கொண்டான். இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள்-வைகாசி மாத வளர்பிறை 10-ஆம் நாளில்தான். அவன் தன் முன்னோரின் பாவங்களை நீக்கிய இந்நாள் பாஹர தசமியாகும். இதையொட்டி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத் திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். காசி, அஹமதாபாத்தில் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் தொலையும்; பித்ருக்களின் ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம். பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, கங்கைத் தாயே என குரலெழுப்பி மனமார வணங்குகின்றனர். பிரவகிக்கும் கங்கை நீரை கண்ணார தரிசிக்கின்றனர். தொட்டு வணங்கி தலையில் தெளித்துக்கொண்டு கங்கையை போற்றிப் புகழ்ந்தபடி மூழ்கிக் குளிக்கின்றனர். நதியிலேயே நின்று பூஜிக்கின்றனர். நீரில் அர்க்கியம் விடுகின்றனர். அதன்பின் நீரின் அடியில் உ<ள்ள மண்ணை எடுத்து வணங்குகின்றனர். மாலையில் நதி ஓரம் முழுதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபத்தை கங்கைக்கு காட்டி பூஜிப்பார்கள். நதி ஓர கடைகளில் இலையால் செய்த சிறு படகில் விளக்கு வைத்து பூ வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி பக்தர்கள் ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.
கங்காதேவி திருவுருவம்
நதிநீரில் முதலை - முதலை முதுகில் வெண் தாமரை - அம்மலர்மீது வெண்ணிற ஆடையுடுத்திய கங்காதேவி கையில் தாமரை, நீர்க்குடம் ஏந்தி, இரு கைகள் அபயவரத ஹஸ்தமாக, புன்னகையுடன் அமர்ந்து காட்சி தருகின்றாள். கிரீடத்தில் பிறைச் சந்திரனைக் காணலாம். கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவை மனதில் <உருவகப்படுத்தி, கங்கையின் திருநாமம் கூறிக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதை கங்கா ஜமாக என்று பூஜித்து வணங்கினாலும் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிடைக்கும். கங்கை வழிபட்ட தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று திருச்சி காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்-காவிரி நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் காசி விஸ்வநாதர் சன்னதி வாசலில் வலப்பக்கம் விநாயகரும், இடப்பக்கம் கங்காதேவியின் விக்ரகமும் <உள்ளன. தினமும் இந்த கங்கா தேவி காவிரித் தீர்த்தத்தால் அபிஷேகிக்கப்படுகிறாள். இப்படி கங்கைக்கு காவிரி நீரில் அபிஷேகம் செய்வதை இங்கு மட்டும்தான் காணலாம். இது ஒரு அபூர்வ காட்சியாகும். இவ்வாலயத்தில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சியையும், ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சியையும், தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரி சமேத ஐம்புகேஸ்வரரையும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரரையும் என ஐந்து ஈசனாரையும் தரிசிக்கலாம். பாவங்கள், நோய் உள்ளிட்ட தீவினைகள் அகன்று நன்மைகள் பல பெற்று வாழ இவ்வாலயம் சென்று வழிபடலாம்.