பதிவு செய்த நாள்
21
மே
2013
05:05
பார்வதி மட்டுமில்லாமல் முருகனுக்கு "சஷ்டி பெண்கள் என்றும் கார்த்திகை பெண்கள் என்றும் அழைக்கப்பட்ட ஆறு தாயார்கள் இருந்தனர். அவர்கள் ஆறுபேரும் அவரது தாய்மார்களே. நட்சத்திர வரிசையில் கார்த்திகை ஆறாவது. அதேபோல, திதிகளில் சஷ்டி ஆறாவதாகும். சிவனுக்குரிய ஐந்து முகங்களும், ஞானியர் மட்டுமே தரிசிக்கும் அதோமுகத்தோடு சேர்ந்து ஆறுமுகங்கள் உண்டானது. இவருக்குரிய மந்திரம் "சரவணபவ என்னும் ஆறு எழுத்து கொண்டது. காமம் (பொருள் ஆசை), குரோதம் (கோபம்), லோபம் (கருமித்தனம்), மோகம் (பெண்ணாசை), மதம் (ஆணவம்), மாச்சரியம்(பொறாமை) என்னும் ஆறு பகைவர்களையும் அழிக்கும் படைவீரராகத் திகழ்கிறார். அந்த ஆறுமுகப்பெருமானை தரிசித்தவருக்கு வாழ்வில் என்றென்றும் ஏறுமுகம் தான்.
முருகன் கதை கேட்டா லாபம்: காளிதாசர் எழுதிய காவியங்களில் குமார சம்பவம் புகழ்பெற்றது. வால்மீகி ராமாயணத்தில் இருந்தே காளிதாசர் இந்த சொல்லை எடுத்தாண்டுள்ளார். விஸ்வாமித்திரர் பாலகாண்டத்தில் ராமலட்சுமணருக்கு முருகனின் வரலாற்றை எடுத்துச் சொல்லியதாக ராமாயணம் கூறுகிறது. குமாரசம்பவம் என்னும் இப்புனிதமான கதையைக் கேட்டவருக்கு செல்வம் சேரும். கார்த்திகேயனிடம் பக்தி வைத்தவருக்கு இப்பிறவியில் தீர்க்காயுள், மழலைச்செலவம் போன்ற பாக்கியம் உண்டாவதோடு ஸ்கந்த லோகத்தில் வாழும் பாக்கியமும் வாய்க்கும்.
செவ்வேள் முருகன்: ஒருமுறை சிவன் தியானத்தில் இருந்த போது, அவர் மீது காதல் பாணத்தை தொடுத்தான் மன்மதன். கோபமடைந்த சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க நெருப்புக்கு இரையானான். அவனுடைய கரும்பு வில்லையும், மலர் அம்பையும் அம்பிகை எடுத்துக் கொண்டாள். அவற்றை சிவனின் பாதத்தில், அர்ப்பணித்து வணங்கினாள். அப்போது, மன்மதனை எரித்த அதே கண்ணிலிருந்து ஆறுபொறிகள் புறப்பட்டன. அவை சரவண பொய்கையில் விழுந்து ஆறுகுழந்தைகள் உண்டாயின. பார்ப்பதற்கு மன்மதனைப் போலவே அவர்கள் இருந்தனர். மன்மதன் கருநிறம். ஆனால், இந்த ஆறுமன்மதர்களோ சிவப்பு நிறம். அதனால், தமிழில் மன்மதனை கருவேள் என்றும், முருகனை செவ்வேள் என்றும் குறிப்பிடுவர். "வேள் என்ற சொல்லுக்கு அழகுமிக்கவன் என்பது பொருள்.
இறைவனுகே நீ இறைவனப்பா!: பிரம்மாவின் மனதில் இருந்து பிறந்தவர் சனத்குமாரர். பிரம்மஞானியான இவரைக் காண சிவபார்வதி வந்தனர். ஆனால், அவர்களை அவர் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தார். தெய்வத்தைக் கோயிலில் பார்த்தாலே, அது வேண்டும், இது வேண்டும் என கேட்பது <உலக வழக்கம். ஆனால், தெய்வம் நேரில் வந்தும் சனத்குமாரர் ஏதும் கேட்கவில்லை. இதனால் மகிழ்ந்த சிவன், ""உன் பற்றற்ற நிலையைப் பாராட்டி வரம் தருகிறேன், கேள், என்றார். சனத்குமாரரோ தனக்கு எதுவுமேதேவையில்லை என்று சொல்லிவிட்டார். சில ஞானிகள் "பிறவாவரம் கொடுங்கள், என்றாவது தன் ஆசையை வெளிப்படுத்துவார்கள். சனத்குமாரர் அதைக்கூட கேட்க விரும்பவில்லை. வியந்து போன சிவன் அவரிடம், ""நீ என்னிடம் வரம் கேட்காவிட்டால் பரவாயில்லை. நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன். நீயே எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும், என்றார். சனத்குமாரரும் ஒப்புக்கொண்டார். ஆண்டிச்சாமியாக இருந்த சனத்குமாரர், அடுத்த பிறவியில் சிவனுக்கு மகனாகப் பிறந்து, ஆண்டிக்கோலம் பூண்டு பழநி சென்றார்.