பதிவு செய்த நாள்
27
மே
2013
10:05
திருச்சானூர்: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், வி.ஐ.பி., தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு, 100 ரூபாய், 200 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், கொடி மரத்தைத் தாண்டி, நேராக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தற்போது அந்த வரிசையை மூடி விட்டு, தரும தரிசனம் மற்றும், 20 ரூபாய் டிக்கெட் வரிசைக்கு அருகில், புதிய வரிசையை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது, கோவிலை ஒரு முறை வலம் வந்தபின், சன்னதிக்கு முன் உள்ள, தரும தரிசனம் மற்றும், 20 ரூபாய் வரிசையுடன் கலந்து வி.ஐ.பி., பக்தர்களும் பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.
உயர் மேடை வசதி : இதுதவிர, திருமலை ஏழுமலையான் கோவிலில் உள்ளது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, தரிசன பாதையில், உயர் மேடை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
சாத்தியம் தானா? ; ஆனால், உயர் மேடையை, தாயார் கோவிலில் அமைப்பது சாத்தியம் தானா என்ற கேள்வி தேவஸ்தான அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் நித்ய கல்யாண உற்சவத்தின் முதல் சேவையின் போது, உற்சவ மூர்த்திகளை கோவிலுக்குள் இருந்து வெளியில் ஊர்வலமாக கொண்டு வருவர். அதே போல், கோவிலில் நடைபெறும் வாராந்திர சேவைகளான, அஷ்டதலபாதபத்மாராதனை, திருப்பாவாடை, அபிஷேகம், புஷ்பாஞ்சலி சேவைகளின்போதும், உயர் மேடையை தினசரி, எட்டு முறை அகற்றி, மீண்டும் பொருத்த வேண்டிய நிலைமை உள்ளது. இதற்கு நேரமும் அதிகம் தேவைப்படுவதால், தரிசனத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகம விதி மீறல் ; திருமலையில் ஏழுமலையான், நின்ற கோலத்தில் இருப்பதால், உயர் மேடை அமைக்கும்போது, எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், திருச்சானூர் பத்மாவதி தாயார், பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இருப்பதால், தாயாரின் உயரத்திற்கு மேல், பக்தர்கள் உயரத்தில் நின்று தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இது ஆகம விதிக்கு பொருந்தாது. தாயாரின் பாதத்திற்கு கீழ் நின்று பக்தர்கள் தரிசித்தலே மரபு என்ற கருத்தும் கூறப்படுகிறது. அதுபோல், உயர் மேடை அமைக்கும்போது, கோவிலில் உள்ள உண்டியலை, கொடி மரத்திற்கு அருகில் அமைக்க வேண்டி வரும். இதுவும் சாஸ்திரத்திற்கு எதிரானது என, ஆகம பண்டிதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு துணை செயல் அதிகாரி பாஸ்கர் ரெட்டியிடம் கேட்ட போது, "மக்கள் மன நிறைவுடன் தாயாரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், உயர் மேடையை அமைத்துள்ளோம். இதுகுறித்து கோவில் அர்ச்சகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். உயர் மேடை அமைப்பதனால், சிக்கல்கள் உருவாகும் என்று தெரிந்தால், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.
அனுமந்த வாகனம்: திருப்பதியில் நடைபெற்று வரும் கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், ஆறாம் நாளான நேற்று காலை, கோவிந்தராஜ பெருமாள் அனுமந்த வாகனத்தில் வலம் வந்தார். மாலை நடைபெற்ற வசந்தோற்சவ விழாவின் போது, தங்கத் தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடனும், இரவு, யானை வாகனத்திலும் வலம் வந்தார்.