பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
தஞ்சாவூர்: தஞ்சையில் யோக நரசிம்ம பெருமாள் ஸ்வாமி கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, 16 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு ஹோமங்கள் செய்து, வழிபாடு நடந்தது.தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உள்பட்ட யோக நரசிம்ம பெருமாள் ஸ்வாமி கோவில் கொண்டிராஜபாளையத்தில் அமைந்துள்ளது. இங்கு, சுவாதி நட்சத்திரத்தில் மாலையில், வழிபாடு செய்தால், காரிய தடை நீங்கும். கடன் தொல்லை தீரும். செல்வ செழிப்பு பெருகும் என்பது ஐதீகம்.நரசிம்மஜெயந்தி விழா யோக நரசிம்ம பெருமாள் ஸ்வாமி கோவிட்டல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அருகம்புல், மல்லிகை பூ, துளசிபத்திரம், எள், அரசு சமித்து, பச்சைக்கற்பூரம், செந்தாமரை, வில்வபத்ரம், வெண்கடுகு, நாயுருவி, குங்குமப்பூ உள்ளிட்ட 16 வகை மூலிகைகளை கொண்டு நரசிம்மர் மூல மந்திர ஹோமங்களான விஷ்ணு சூக்த ஹோமம் நடந்தது.இதில், ஆண்டாள் திருப்பேரவை தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராஜா, பொருளாளர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வழிபட்டனர். இதை சுதர்ஸன பட்டாச்சாரியார், சீனிவாச பட்டாச்சாரியார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர். தொடர்ந்து நரசிம்மருக்கு பால், இளைநீர், அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை, பூஜை நடந்தது.