புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளையில் வைகாசி பவுர்ணமியையொட்டி மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் புகழ்பெற்ற மன்மதன் கோவில் உள்ளது. நாடு வளம் பெறவும், மழை பெய்து விவசாயம் தழைக்கவும், பெண்களுக்கு திருமணம் நடக்கவும் பிரார்த்தனை செய்து, ஆண்டு தோறும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 25ம் தேதி காலை மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. விழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் திருமணமாகாத இளைஞர்கள் மன்மதனுக்கு காப்பு கட்டினால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். திருமணமாகாத இளைஞர்கள் மன்மதனுக்கு காப்பு கட்டினர். அதிலிருந்து தினமும் இரவு மன்மதனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை செய்யப்பட்டது. 25ம் தேதி காலை 6:00 மணிக்கு வைகாசி பவுர்ணமியையொட்டி மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.